குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்களின் சிறப்பு நாள், யூதர்களின் பஸ்கா பண்டிகைக்காக இயேசு எருசலேமுக்கு செல்லுதலும் யூதர்கள் ஆரவாரமாக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதலும்.
இயேசு தனது மரணத்தை நினைவு கூர்ந்தவராக தனது சீடர்களை அழைத்துக் கொண்டு எருசலேம் நோக்கி செல்கிற பொழுது அனேக யூதர்கள் தாங்கள் பஸ்காவை கொண்டாடும் படியாக எருசலேமுக்கு வந்து திரண்டு இருந்தனர்.
யூதர்களில் பலர் இயேசு செய்த பல்வேறு அற்புதங்களை பற்றி கதைக்கும் தளமாக அந்த பஸ்கா நாட்கள் காணப்பட்டது.
பஸ்கா பண்டிகை எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என பார்க்கிற பொழுது அது மோசேயின் காலத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த பொழுது அவர்களது விண்ணப்பத்தை இறைவன் கேட்டு அவர்களை விடுவிக்க சித்தமாகினார்.
அவ்வாறு இஸ்ராயில் ஜனங்களை விடுவிப்பதற்காக மோசே இறைவனுடைய தூதுவனாக எகிப்திற்கு வந்து அரசனான பார்வோனிடம் தனது ஜனங்களை விடுவிக்குமாறும் இஸ்ரவேலின் ஏக இறைவனான யாவேயை தொழுது கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்கிறான்.
ஆனால் பல்வேறு முறைகளில் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்கு எகிப்திய அரசன் பார்வோன் தடை ஏற்படுத்துகின்றான்.
ஆகவே இறைவன் எகிப்து நாட்டிலே பல்வேறு வாதைகளை ஏற்படுத்துவதை வேதாகமத்திலே யாத்திராகமம் முதல் 12 அதிகாரங்களிலே காணலாம்.
குறிப்பாக 10 தண்டனைகள் எகிப்து நாட்டிலே ஏற்படுவதை நாம் காணலாம். ஒவ்வொரு தண்டனைகளின் போதும் எகிப்திய அரசன் மனம் மாற முடியாமல் இஸ்ரவேலரை இன்னும் தனது அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்க விரும்பினான்.
பத்தாவது தண்டனையாக இறைவன் எகிப்திய மன்னனுக்கு தண்டனையை கொடுப்பதற்கு முன் மோசேயிடம் பேசி இந்தத் தடவை நிச்சயமாக எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறி உங்கள் சொந்த நாட்டை நோக்கி நீங்கள் செல்வீர்கள் என உறுதி அளிக்கின்றார்.
அவ்வாறு சொந்த நாட்டுக்கு செல்வதற்காக ஆயத்தப்படுத்தும் படியாக இஸ்ரவேல் ஜனங்களை மோசே ஆயத்தப்படுத்தும் அதே நேரத்தில் அது எகிப்தியருக்கு மாபெரும் தண்டனையாக அமைந்தது.
யூதர்கள் தங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தங்களுடைய சொந்த தேசத்துக்கு செல்லும் அந்த நாளில் அவர்கள் ஒரு ஆட்டை பலியிட்டு அதன் ரத்தத்தை தங்கள் வீட்டு வாசலில் அதாவது நிலைகளிலும் நிலையின் மேலும் ரத்தத்தை பூசி விட வேண்டும்.
அதன்பின் அவர்கள் அந்த ஆட்டை வேகமாக சுட்டு மாவை பிசைந்து அதையும் புளிக்காத அப்பமாக சுட்டு கசப்பான கீரையுடன் சாப்பிட வேண்டும்.
சாப்பிடுகின்ற போது பயணத்துக்காக ஒரு கைத்தடி மற்றும் பயண ஆயத்தங்களுடன் சாப்பிட வேண்டும்.
தாங்கள் எந்த நாட்டில் அடிமைகளாக இருந்தார்களோ அந்த மக்களிடம் அவர்கள் பொன் வெள்ளியிலான பொருட்களை கேட்டு பெற்றிருந்தார்கள்.
அன்றைய இரவு சாவின் தூதன் எகிப்த்திய நாட்டை கடந்து சென்று எங்கெங்கு இரத்தம் பூசப்பட்டிருக்கிறதோ அந்த வீடுகளை விட்டு விட்டு ரத்தம் பூசப்பட்டிறாத எகிப்தியருடைய வீடுகளிலுள்ள மூத்த பிள்ளை அதாவது தலைப்பிள்ளையை கொன்று போட்டான்.
தங்களுடைய மூத்த பிள்ளைகள் இறந்ததால் அரசனின் கட்டளைப்படி அங்கிருந்த இஸ்ரவேல் மக்களை இரவோடு இரவாக வெளியேறும்படி கட்டளை கொடுத்தார்கள்.
இவ்வாறு இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த நாளின் சம்பவமே பஸ்கா பண்டியாக இந்நாள் வரை இஸ்ரவேல் தேசத்திலே புளிப்பில்லாத அப்பப் பண்டியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறாக காலம் காலமாக கொண்டாடப்பட்டு வந்த பஸ்கா பண்டிகை நாட்களிலேயே இஸ்ரவேல் ஜனங்கள் இஸ்ரவேல் தேசத்தின் தலைநகரமாக இருக்கிற எருசலேமில் கூடி பஸ்கா பண்டிகையை கொண்டாடும் ஆயத்தங்களில் இருந்தார்கள்.
இவ்வாறு பஸ்கா பண்டிகையை கொண்டாட இருந்த இஸ்ரவேலர்கள் அவர்கள் மத்தியிலே அற்புதங்களை செய்த இயேசுவை அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
இயேசுவும் எருசலேமுக்கு வருவார் என அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஆனாலும் யூதர்களின் தலைவர்களாக இருந்த பரிசெயர்கள் இயேசுவின் அற்புதங்களால் கலக்கமடைந்து யூதர்கள் தங்களை தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றி விடுவார்களோ என பயந்து எப்படியாவது இயேசுவை கொலை செய்ய வேண்டும் என தீர்மானம் எடுத்து இயேசுவை காண்பவர்கள் அவரை தங்களிடம் காட்டிக் கொடுக்க வேண்டும் என கட்டளை போட்டிருந்தார்கள்.
இதனால் இயேசு எருசலேம் நகரத்துக்குள் இராமல் யோர்தான் பகுதியில் தனது ஊழியத்தை நடத்தி வந்தார்.
இயேசு இவ்வாறு தனது ஊழியத்தை நடத்தி வருகிற பொழுது பெத்தானியா எனும் கிராமத்திலே லாசரு எனும் மனிதன் வியாதியாய் இருந்து இயேசுவை அழைத்த போதும் இயேசு செல்லாததால் அவன் மரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவன் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு நான்கு நாட்கள் ஆன பின்னர் இயேசு அந்த பெத்தானியா கிராமத்துக்கு செல்கிறார். லாசருவினுடைய சகோதரிகளும் சில யூதர்களும் மரண வீட்டிலே இயேசு வருவதையும் இயேசுவின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.
லாசருவின் சகோதரியின் கவலையையும் கண்ணீரையும் இயேசு கண்டு கண்ணீர் வடிப்பதை இங்கு காணலாம்.
ஆனால் இயேசு வெறுமனே கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அதைவிட மேலான காரியத்தை செய்கிறார்.
கல்லறையில் உள்ள கல்லை புரட்டச் சொல்லி சத்தமாக லாசருவே வெளியே வா என கூப்பிட்டு லாசருவை உயிரோடு எழுப்புகிறார்.
உயிரோடு எழும்பியவனைக் குறித்து யூதர்கள் இஸ்ரவேலர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த சம்பவம் பாஸ்கா பண்டிகையை கொண்டாட வந்த இஸ்ரவேல் மக்களான யூதர்கள் மத்தியிலே பிரதான செய்தியாக காணப்பட்டது.
பஸ்காவை கொண்ட எருசலேமில் இருந்த மக்கள் மத்தியிலே இயேசுவின் வருகையும் அவர் செய்த அற்புதங்களும் குறிப்பாக லாசருவை உயிரோடு எழுப்பிய சம்பவமும் பிரதான செய்திகளாக இருந்தது.
இதனால் எருசலேமில் இருந்த மக்கள் மிகுந்த உற்சாகமாக இயேசுவை எதிர்பார்த்து அவர் வருவார் என எண்ணிக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது அந்த மக்களுக்கு இயேசு வருகிறார் என்ற செய்தி எங்கும் பரவியது.
இதைக் கேட்ட மக்கள் இயேசுவை வரவேற்க ஆயத்தமாகினர்.
இயேசுவை எவ்வாறு வரவேற்பது என்பதை குறித்து மக்கள் எண்ணினாலும் இயேசுவும் தாம் எவ்வாறு எருசலேமுக்கு செல்வதென வேதாகமத்தின் முழு தீர்க்கதரிசனங்களுக்கும் அமைவாக செயற்பட்டுக் கொண்டு இருந்தார்.
இயேசுவின் பிறப்பு, அவருடைய வாழ்க்கை முறைமை, யூத தலைவர்களுக்கு அவர் பதில் கொடுத்த விதங்கள், அவருடைய போதனைகள், பிரசங்கங்கள், ஆலயத்தில் நடந்து கொண்ட முறைகள், இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு எல்லாமே வேதாகமத்தில் ஏற்கனவே கூறப்பட்டவாறு நடைபெற்று வந்தது.
வேதாகமத்தின் தீர்க்க தரிசன வார்த்தைகளுக்கு அமைய அவருடைய வாழ்க்கை காணப்பட்டது.
இவ்வாறு எருசலேமுக்குள் இயேசு கழுதையின் மேல் ஏறி வருவதைக் கண்ட ஜனங்கள் தாங்கள் கேள்விப்பட்ட வண்ணமாகவே இயேசு வருவதை கண்டு குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போனார்கள்.
தங்களுடைய வஸ்திரங்களை வழிகளிலே விரித்தார்கள். மரக்கிளைகளைக் கொண்டு வந்து வீதிகளிலே போட்டு இயேசுவை வரவேற்றார்கள்.
அவர்கள் புறப்பட்டு வந்து ஆர்ப்பரித்தார்கள். இயேசுவை புகழ்ந்தார்கள்.
ஓசன்னா கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கூறி வரவேற்றார்கள்.
இயேசு ஏறி வந்த கழுதை மற்றும் அதன் குட்டி சமாதானத்துக்கு அடையாளமாக காண்பிக்கப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் சுமை சுமப்பதற்கு மாடுகள் பயன்படுவது போல, பாலைவனங்களில் சுமைகளை சுமப்பதற்கு ஒட்டகங்களை பயன்படுத்துவது போல, இஸ்ரவேல் நாட்டிலே சுமைகள் சுமப்பதற்கும் மனிதர்கள் பயணம் செய்வதற்கும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இயேசுவின் நாட்களில் ரோமர்களே குதிரைகளை பயன்படுத்தினார்கள் என காணக்கூடியதாக இருக்கிறது.
யுத்தத்துக்காகவே குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயேசு இவ்விதமாக குதிரையை பயன்படுத்தி இருந்தால் ரோமர்கள் அவருக்கு எதிராக போர் செய்ய வந்திருப்பார்கள்.
ஆனால் இயேசு போர் செய்யும் நோக்கத்தோடு வரவில்லை. அவர் சமாதானத்துக்காக எருசலேமுக்கு வந்தபடியால் அவர் கழுதையை தெரிந்து கொள்கிறார்.
தீர்க்கதரிசனத்தின் படி சகரியா 9ம் அதிகாரம் 9ம் வசனம் படி சீயோன் குமாரத்தியே மிகவும் களிகூறு, எருசலேம் குமாரத்தியே கெம்பீரி. இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதி உள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின் மேலும் கழுதை குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாய் இருக்கிறார்.
என்ற தீர்க்கதரிசன வார்த்தைக்கு அமைவாக இயேசு கழுதையின் மீது எருசலேமுக்கு சென்றார்.
மக்கள் ஆர்ப்பரித்த ஓசன்னா என்ற வார்த்தை சங்கீதம் 118 இல் 24, 25, 26 இல் இருந்து வருகிறது.
/இது கர்த்தர் உண்டு பண்ணின நாள். இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம். கர்த்தாவே இரட்சியும். கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்/
ஆகவே ஓசன்னா என்ற வார்த்தை கர்த்தாவே இரட்சியும். கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது.
இந்த குருத்தோலை வரவேற்பு சம்பவம் தற்போதைய கிறிஸ்தவ சபைகளில் ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இது ஒரு கிறிஸ்தவ விழாவாக இருந்தாலும் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்பட்டாலும் இதற்கு பின்னர் நடந்த சில சம்பவங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது.
முதலாவதாக இயேசு ஆலயத்துக்கு சென்று அங்கு பிதாவுக்கு மகிமையற்ற காரியங்களை செய்த வியாபாரிகளின் செயல்பாடுகளை இயேசு கண்டிக்கிறார்.
இயேசு தனது பிதாவான இறைவனின் சித்தத்தை ஆலயத்தில் செய்யாது தமது வியாபாரத்தை முன்னெடுத்தவர்கள் செய்த பிழையான காரியங்களை கண்டித்து அவர்களை ஆலயத்தில் இருந்து துரத்துகிறார்.
அடுத்து ஒரு அத்திமரத்திலே கனியை தேடி ஏமாற்றம் அடைகிறார். அதை சபித்து போடுகிறார். சபிக்கப்பட்ட அத்திமரம் பட்டுப் போய் விடுகிறது. எத்தனையோ தடவை இறைவன் இஸ்ரவேல் மக்களான அத்திமரம் மனம் திரும்புதலின் கனியை தரும் என எதிர்பார்த்தும் அது மனம் திரும்பாத படியினாலே எருசலேமுக்காக இயேசு கண்ணீர் விடுகிறார்.
இயேசு எருசலேமுக்காக கண்ணீர் விட்டபடியே கிறிஸ்துவுக்கு பின் 72 ஆம் நூற்றாண்டில் எருசலேம் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு அழிக்கப்பட்டு போனது.
கிறிஸ்தவர்களாகிய நாம் மனம் திரும்பாத பட்சத்தில் அத்தி மரத்துக்கு ஏற்பட்டதை போல நாமும் அழிவை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மூன்றாவதாக இயேசு தனது சீடர்களின் கால்களை கழுவுவதை காணலாம். பஸ்காவை ஆசரிக்கும்படியாக இயேசு தனது சீடர்களோடு கூடியிருந்தார்.
அப்பத்தையும் இரசத்தையும் தனது சீடர்களோடு உணவருந்த முன் அவர்களது பாதங்களை கழுவுவதை நாம் காணலாம்.
இவ்விதமாக இயேசுவின் பணியை முன்னெடுத்து செல்லும், இயேசுவின் பரம கட்டளை நிறைவேற்றுபவர்களின் கால்களை ஏசு தாமே துடைத்து கழுவுவதை /மலைகளின் மேல் அவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன/ என்பதை நினைவூட்டுவதாக அமைகின்றது.